February 13, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர காவல் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் சிறுவர் சாலை பாதுகாப்பு பூங்காவில்,இந்திய சாலை பாதுகாப்பு குழு தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அபை மனோகர் சாப்ரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இப்பூங்காவானது மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நகரிலுள்ள சாலைகள் மற்றும் வீதிகளை எடுத்துக்காட்டாக சித்தரிக்கும் விதத்தில் உருவகப்படுத்தப்பட்ட இந்த பூங்காவில் குறிப்பிட்ட சந்திப்புகளில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சமிக்ஞைகள்,சாலை குறியீடுகள், போக்குவரத்து கண்காணிப்பு,பாதசாரிகளுக்கான நடைபாதைகள்,சாலையோர தாவரங்கள், மீன் தொட்டிகள்,எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. ப்ரொஜெக்டர்களுடன் கூடிய அரங்கம், கண்காணிப்பு கோபுரம்,சிறிய பொதுக்காட்சி கூடம் உள்ளிட்டவை நேர்த்தியாக அமைக்கப்பட்டு நிஜ சாலை அமைப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து போக்குவரத்து காவல் உதவி கமிஷனர் (கிழக்கு) அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இந்திய சாலை பாதுகாப்பு குழு தலைவர், சாலை பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுவது குறித்தும், சாலை விதிகளை மீறுவோர் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர், காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, உதவி கமிஷனர்கள் (போக்குவரத்து) சரவணன், ராஜ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.