February 11, 2021
தண்டோரா குழு
கடந்த 1 ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்த 5 பயணிகளை , விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர்கள் 5 பேரும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 6318 கிராம் எடைக்கொண்ட பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, 5வரில் ஒருவர் பதற்றமாக இருந்ததை அறிந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 324 கிராம் எடைக்கொண்ட தங்கம் அடங்கிய 28 கேப்சூல்கள் விழுங்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மலக்குடலிலும், விழுங்கப்பட்ட கேப்சூல்கள் மூலம் மொத்தமாக 6642.4 கிராம் தங்கத்தை பல்வேறு வழிகளில் பிரித்தெடுத்ததில் ரூ.2.85 கோடி மதிப்பிலான 24கேரட் 5747 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மலக்குடலில், பைகளில், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் மட்டுமே கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி தங்கம் கடத்தி வரப்பட்டது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.