February 9, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் யாரும் பீ டீம் இல்லை. அதிமுக – பாஜக ஒரே டீம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்திற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கற்பனையான பாதிப்பை கொண்டு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எந்த நியாயமும் இல்லாமல் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரி பூச வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. 2019 க்கு பிறகு திமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. முன்னுக்கு பின் முரணாக உளறலாக ஸ்டாலின் பேசுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமமுகவில் தினகரன் இடத்திற்கு வேணாடுமானால் சசிகலா வரலாம் எனவும், சசிகலா வருகையால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தமிழுக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பாஜக தான் எனவும், ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்யாமல், முகமது நபிகளை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமனை கைது செய்தது பாரபட்சமானது எனவும் அவர் தெரிவித்தார். அரசு ஆலயங்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்ற ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் கருத்து சரியானது எனவும், சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். வெள்ளி வேல் கொடுத்திருந்தால் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வாங்கியிருப்பார். பித்தளை வேல் என்பதால் தான் வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பாஜகவின் பீ டீம் அதிமுக என்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்து குறித்த கேள்விக்கு, யாரும் பீ டீம் இல்லை. அதிமுக – பாஜக ஒரே டீம் என பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்ற தேர்தலிலும், தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்கும் எனவும், எங்களது வளர்ச்சிக்கு ஏற்றது போல தொகுதி பங்கீடு இருக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.