February 3, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2.7கி.மீ சுற்றளவில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஸ்மார்ட் சிட்டி பணிகளான சாலை அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், தொலைத் தொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள், பூங்காக்கள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பம் கணக்கெடுப்பில் விடுபட்ட புதிய குடும்பங்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர்கள் (குடிநீர் திட்டம்) பார்வதி, (ஸ்மார்ட் சிட்டி) திரு.சரவணக்குமார் மண்டல உதவி ஆணையாளர்கள் ரவி(தெற்கு), மகேஷ்கனகராஜ்(மத்தியம்) மற்றும் பலர் உடனிருந்தனர்.