February 2, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் வால்பாறை சின்கோணாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனையை பொது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் கோவை மாவட்டம் வால்பாறையிலும், நீலகிரி மாவட்டத்தில் 2 இடங்களிலும் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வால்பாறையில் சின்கோணாவில் உள்ள அரசு தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனையை சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை, சின்கோணாவில் அரசு தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கட்டிடங்கள், அறுவை சிகிச்சை அறைகள் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் உள்ளனர். தற்போது இந்த மருத்துவமனை தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிர்வகிக்க முடியாத காரணத்தால் பொது சுகாதாரத் துறை சார்பில் எடுத்து நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு மருத்துவமனைகளையும் சுகாதாரத் துறை எடுத்து நடத்த அரசு தேயிலை தோட்டக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சின்கோனாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனையை பொது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வசதிகளும், தேவையான பணியாளர்களும் உள்ள நிலையில் அரசு சார்பில் ஊதியம் வழங்கினால் மட்டும் போதுமானது. பொது சுகாதாரத் துறையின் கீழ் மருத்துவமனையை நடத்துவதற்கு அரசுக்கு அரசுக்கு கருத்துரு அனுப்பபப்பட்டுள்ளது என்றனர்.