February 1, 2021
தண்டோரா குழு
மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் தொழில் துறைக்கும் மக்களுக்கும் சாதகமான பட்ஜெட்டாக உள்ளதாக கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் அதன் நிர்வாகிகள் மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அப்போது,மத்திய அரசின் பட்ஜெட் தொழில் துறைக்கும் நாட்டு மக்களுக்கும் சாதகமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தெரிவித்தனர். மேலும் ஏழு இடங்களில் டெக்ஸ்டைல் பூங்காக்கள் என அறிவித்துள்ளது அந்தத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் தமிழகத்துக்கு இரண்டு அல்லது மூன்று டெக்ஸ்டைல் பூங்காக்கள் வர வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் பேஸ் 2 திட்டத்துக்கு சுமார் 63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மதுரை – கொல்லம் சாலை திட்டம், தொழில் துறையினருக்கான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வரவேற்கக் கூடிய வகையில் உள்ளது எனவும் இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.