February 1, 2021
தண்டோரா குழு
கோவையில் நேற்று இரவு தனது மொபைல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்த மொபைல் கடை உரிமையாளரை மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் இரும்புக்கம்பி மற்றும் ஆயுதம் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை, காந்திபுரம், கிராஸ்கட், 10-வது வீதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வருபவர். பாலாஜி (வயது 32), இவர் நேற்று வழக்கம் போல் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது ஜி.பி சிக்னல் அருகே வந்து கொண்டிருந்த போது இவருக்கு எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் ஆயுதங்களை கொண்டு சரமாரியாக பாலாஜியை தாக்கத் தொடங்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாலாஜி கூச்சலிட அங்கு இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
அப்பொழுது பாலாஜி தலை, கால், இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். தாக்கியவர்கள் பொதுமக்கள் வருவதை பார்த்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாலாஜியை காந்திபுரம் பகுதியில் உள்ள அஸ்வின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து காந்திபுரம், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலாஜிக்கும், அவர்களுக்கு முன் விரோதம் உள்ளதா? தாக்கினார்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.