January 30, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.168.4 கோடி மதிப்பீட்டில், 61.62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூரில் புதிய ஒருங்கினைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் வெள்ளலூர் உரக்கிடங்கில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பேருந்துநிலைய பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகளை குறித்தும், கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய கட்டுமானப் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் இப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வெள்ளலூர் உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும், காய்கறிக்கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் ஆகிய மையங்களையும் பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.