January 30, 2021
தண்டோரா குழு
கோவையில் பிரசித்தி பெற்ற கணபதி ஓம் காவடி குழுவினர் குதிரை நடனம் மற்றும் தமிழக பாரம்பரிய நடனங்களுடன் காவடி ஏந்தியபடி பழனிக்கு பாதயாத்திரையை துவக்கினர்.
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு வழிபாடுகளுடன் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு பாதயாத்திரையை செல்லும் பக்தர்களுக்கான விழாவை கோவை கணபதி ஓம் முருகன் காவடி குழுவினர் கடந்த 27 ஆண்டுகளாக வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் 28 ஆம் ஆண்டு விழா கணபதி பகுதியில் உள்ள ஸ்ரீ பாலமுருகனுக்கு மங்கள வாத்தியம் முழங்க 108 பால்குடம் எடுத்து கோட்டை பிள்ளையார் கோவிலிலிருந்து ராஜவீதி வழியாக பிளேக் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது தொடர்ந்து அபிஷேக ஆராதனை வழிபாடு காவடி முத்தரித்தல், உச்சிகால பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பாலமுருகன் குதிரை பூட்டிய ரதத்தில் திருவீதி உலா மற்றும் குதிரை நடனம் நாட்டியம் ஆறுமுகக் காவடி விளையாட்டு காவடி செண்டை மேளம் ஜமாஅப் மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் தொடர்ந்து பாலமுருகன் ரதத்தில் எழுந்தருளி ஆறுமுகக் காவடி விளையாட்டுகளுடன் பழனியை நோக்கி குதிரை பூட்டிய ரதத்தில் பாதை யாத்திரை துவங்கியது.
இது குறித்து கணபதி முருகன் காவடி குழுவின் தலைவர் கணபதி செந்தில் கூறுகையில்,
தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த விழாவை நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு எங்களது காவடி குழுவினர் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கணபதி செந்தில் தங்கமணி மோகனன் உட்பட காவடி குழு உறுப்பினர்கள் பலர் செய்திருந்தனர்.