January 28, 2021
தண்டோரா குழு
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.பி என சொல்லக்கூடிய குறைந்த பட்ச ஆதர விலை நிர்ணயத்தை மத்திய , மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாளக உள்ளது. தென்னை, மக்காசோளம் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனிடையே காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதற்கான உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். இடைத்தரகள் அவர்களிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி சென்று, மக்களிடம் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கூறுகையில்,
“தண்ணீர் பிரச்னை, வேலை ஆட்கள் பிரச்னை, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் காய்கறி விவசாயிகள் அதற்கான உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக வெண்டைக்காய் விவசாயம், நாள்தோறும் வெண்டைக்காய்களை பறிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது முற்றிவிடும் அப்படி இருக்க பறிக்கப்படும் வெண்டைக்காய்களை இடைத்தரர்கள் எங்களிடம் கிலோ ரூபாய் 10 முதல் 15 என வாங்கிக்கொண்டு ரூபாய் 30 முதல் 40 வரை என விற்பனை செய்கிறார்கள். வெண்டைக்காய்களை உற்பத்தி செய்ய விவசாயிக்கு கிலோ ஒன்றிற்கு 15 முதல் 20 வரை ரூபாய் செலவாகிறது. ஆனால் எங்களுக்கு அசல் விலைக்கூட கிடைப்பது இல்லை. இதனை தடுக்க காய்கறி சந்தைகள் உள்ளிடவற்றில் அரசு ஒழுங்குமுறை விலை நிர்னயம் செய்ய வேண்டும். இடைத்தரர்களை ஒழிக்க வேண்டும்,” என்றனர்.
சிறு விவசாயிகள் தாங்கள் உறபத்தி செய்யும் காய்கறிகளை உழவர் சந்தைகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். ஆனால் வேலை பழு காரணமாக பல விவசாயிகள் செல்லமுடிவது இல்லை. இதனை பயன்படுத்தி இடைதரகர்கள் அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி பல மடங்கு லாபத்துடன் சந்தைகளில் விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கும் சூழல் நிலவி வருகிறது. இது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் என கருதப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் காய்கறிகளை உழவர் சந்தையில் அவர்கள் நிர்னயக்கும் விலைக்கு விற்பது வாடிக்கையாகும். ஆனால் வியாபாரிகள் சிலர் இடைதரர்கள் மூலம் வெளியூரிலிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை கொண்டு வந்து, அதிக விலைக்கு மக்களுக்கு விற்கும் அவல நிலை தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உழவர் சந்தைகளில் அதிகரித்து உள்ளது. வியாபாரிகளுக்கேன தனி மார்க்கெட் சந்தைகள் இருந்தாலும் கூட உழவர் சந்தைகளில் அவர்களின் ஆதிக்கம் தொடர்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி. வெற்றி கூறியதாவது:
“இடைத்தரர்களை ஒழிக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் குறைந்த பட்ச ஆதர விலை நிர்ணயத்தை அரசு செய்ய வேண்டும். எப்படி அரிசி, கரும்பு போன்றவற்றிக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறதோ,அது போல் காய்கறிகளுக்கும் குறைந்த பட்ச ஆதர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கிலோ ஒன்றிக்கு குறைந்த பட்ச விலையிலிருந்து தான் வியாபாரிகளுக்கு விவசாயிகள் காய்கறிகளை விற்க முடியும். இதனால் அவர்களுக்கும் பொதுமக்களும் நஷ்டம் ஏற்படாது. அதே போல் வெளியூர் வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகளிடம் சேர்ந்து உழவர் சந்தையில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க அரசு முன் வர வேண்டும்,” என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், ‘‘
இடைத்தரகர்களை ஒழிக்க விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய அரசு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இடைத்தரர்களின் ஆதிக்கத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம், வியாபாரிகளுக்கு லாபம், மக்களுக்கு கஷ்டம். தற்போது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன் வைத்து போராடி வருகின்றனர். தக்காளி கிலோ ரூ.1 என விற்பனை செய்யும் போது விவசாயிகள் அதனை சாலையில் கொட்டிவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு காய்கறிகளுக்கும் அதற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,’’ என்றார்.
விவசாயம் தான் ஒர் நாட்டின் முதுகு எலும்பு என சொல்லப்படுகிறது. அப்படிபட்ட விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க விவசாயிகளே அவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.