January 22, 2021
தண்டோரா குழு
ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ நடத்தும் 23வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் இறுதிச் சுற்று போட்டி கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜனவரி 21-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் எல்ஜிபி 4 மற்றும் நோவிஸ் கோப்பை பந்தயங்களுக்கான 2 சுற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த போட்டிகளுக்கான இறுதிச் சுற்று நடைபெறுகிறது. இந்த போட்டிகள் 24-ந்தேதி வரை நடைபெறுகின்றன.எல்ஜிபி 4 மற்றும் நோவிஸ் கோப்பை ஆகிய பந்தயங்களின் ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 போட்டிகள் நடைபெறுகின்றன.பார்முலா எல்ஜிபி4 பிரிவில் 39 புள்ளிகள் பெற்ற அஸ்வின் தத்தா இறுதிச் சுற்றில் பங்கேற்கிறார்.
சென்னை எம்ஸ்போர்ட்ஸ் ராகுல் ரங்கசாமி 32 புள்ளிகளுடனும், விஷ்ணு பிரசாத் 30 புள்ளிகளுடனும் இறுதிச் சுற்று பந்தயத்தில் பங்கேற்கிறார்கள். குழு பிரிவில் டார்க் டான் ரேசிங் 80 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.அதனைத் தொடர்ந்து எம்ஸ்போர்ட் 74 புள்ளிகளுடனும் அகுரா ரேசிங் 29 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.கடந்த டிசம்பர் மாதம் நடந்த நோவிஸ் கோப்பை பிரிவில் அமிர் 60 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.அவரைத் தொடர்ந்து டிடிஎஸ் ரேசிங்கை சேர்ந்த துருவின் கஜ்ஜார் 34 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறார்.கொல்கத்தாவை சேர்ந்த பாய் அமன் செளத்ரி 24 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
குழுவை பொறுத்தவரை எம்ஸ்போர்ட் 77 புள்ளிகளுடன் முதலிடத்திலும் டிடிஎஸ் ரேசிங் மற்றும் மொமண்டம் மோட்டார் ஸ்போர்ட் ஆகியவை முறையே 59 மற்றும் 50 புள்ளிகள் பெற்று 2வது மற்றும் 3வது இடம் வகிக்கின்றன. பார்முலா எல்ஜிபி4 ரூக்கி பிரிவில் நெல்லூரை சேர்ந்த விஸ்வாஸ் ஜெயராஜ் 44 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதைத் தொடர்ந்து 35 புள்ளிகளுடன் டேராடூனை சேர்ந்த அனுஷிரியா குலாத்தி 2வது இடத்திலும் பெங்களூரைச் சேர்ந்த சிராக் கோர்படே 34 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். இந்த வார இறுதியில் அனுஷிரியா மற்றும் சிராக் இடையே யார் முன்னிலை வகிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.இறுதிச்சுற்று போட்டிகள் நாளை துவங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற இருக்கிறது.
இந்த போட்டி குறித்து ஜேகே டயர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைவர் சஞ்சய் சர்மா கூறுகையில்,
உலகம் முழுவதும் தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும் மத்திய அரசும் மாநில அரசும் வகுத்துள்ள கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நாங்கள் பந்தயங்களை நடத்தினோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த பந்தயங்களில் பங்கேற்ற வீர்ர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் ஆதரவோடு இது நிகழ்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
இறுதிச் சுற்றுப் போட்டியில் ‘தேசிய சாம்பியன் 2020’ யார் என்பது தெரிந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.