January 21, 2021
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கிலோ மீட்டர் நீளம், 17.20 கிலோ மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தப் பாலப் பணிகளால் மேட்டுப்பாளையம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள், கார்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக மாற்றுப்பாதைகளான வெள்ளக்கிணர் பிரிவு, துடியலூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே போக்குவரத்து மாற்றம் செய்த பின்பும் கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் மந்த கதியில் தான் நடந்து வருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறுகையில்,
‘‘ இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அதிலும் சில இடங்களில் தடுப்பு வைக்கப்பட்டு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் அருகில் உள்ள தெருக்கள் வழியாக இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இப்படி மக்கள் பல்வேறு வகையில் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் போக்குவரத்து மாற்றம் செய்த பின்பும் மந்த கதியில் தான் மேம்பால பணிகள் நடைபெறுகின்றன. ’’ என்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘‘போக்குவரத்து மாற்றம் செய்த பின்பு பணிகள் இடையூறு இல்லாமல் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர்.