January 21, 2021
தண்டோரா குழு
கோவையில் மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுவதால் இரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக தன்னார்வலர்கள் பலர் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.கோவை அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், நல்லறம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் நல்லறம் சுரேஷ், சென்னை மொபைல்ஸ் சம்சு அலி, அனுபவ் ரவி, இக்னீசியஸ் பிரபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் மனிதநேயம் பவுண்டேஷன் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் இரத்ததானம் செய்தனர். இதில் ஓ பாசிட்டிவ் கோவை பஷீர், பால்ராஜ், சித்திக், உமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.