January 20, 2021
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் டெங்கு தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலப்பு பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியார் போன்ற கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.இதில் சிறுவாணியின் மூலம் பெறப்படும் குடிநீர் 20க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு தரப்படுகிறது. இதுபோன்ற பெறப்படும் குடிநீர் மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது.இதனை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘டெங்கு கொசு உற்பத்தியாகமல் இருக்க மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் அபேட் மருந்து கலக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது,’’ என்றார்.