January 20, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ போலிசார் கைது செய்த அருளானந்தம், பாபு, ஹெரைன்பால் ஆகிய மூவருக்கும் வருகின்ற 3ம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு திருநாவுக்கரசு,சபரிராஜன்,சதீஸ்,வசந்தகுமார்,மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் கைது செய்யபட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகானந்தம், ஹெரைன்பால், பாபு ஆகிய மூன்று பேர் கடந்த 6-ம் தேதி கைது செய்யபட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.
இதனையடுத்து மூவரையும் 15-நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மூவரும் கோபி கிளை சிறையலடைக்கப்பட்டனர். இந்நிலையில் மூவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மூவரும் பாதுகாப்பு கருதி காணொளி காட்சி மூலம் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூவரின் நீதிமன்ற காவலையும் வரும் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யபட்ட மூவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி மூவரும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.