January 19, 2021
தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (80). இவர் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டிற்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது.
இதுகுறித்து ராஜசேகர் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேஷன் உத்தரவின் பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.