January 16, 2021
தண்டோரா குழு
மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறுந்தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மூலப்பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பி தொழில் செய்து வருபவர்கள் குறுந்தொழில் முனைவோர்கள். அத்தகைய குறுந்தொழில் முனைவோர்கள் நிறைந்த மாவட்டமாக கோவை உள்ளது. சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் கோவையில் உள்ளன. இதில் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தாக்கம், மூலப்பொருள் விலை ஏற்றம், ஜாப் ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல் என பல்வேறு இன்னல்களை தொழில்முனைவோர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசின் கொரோனா கடன் திட்டத்தில் பயன்பெற முடியாமலும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை தொழில் முனைவோர்கள் சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு குறைந்த பட்ச கடனாக சாலை வியாபாரிகளுக்கு தனிகடன் திட்டம் அறிவித்து அளித்தது போல், குறுந்தொழில் முனைவோர்களுக்கும் திட்டம் அறிவிக்க வேண்டும். குறுந்தொழில்களை பாதுகாக்க குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை நடப்பு கணக்கு வைத்து வரவு, செலவு செய்து வரும் வங்கிகள் மூலம் தனிகடன் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இக்கடன் 5 சதவீதம் வட்டியில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்க வேண்டும். தொழில் சார்ந்த அனைத்து மூலப்பொருட்களுக்கும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் 5 சதவீதம் தான் ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும்.
மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மூலப்பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும். கோவையில் மையப்பகுதியில் குறுந்தொழிலுக்கு தொழில் பேட்டை அமைத்து தர வேண்டும். அது அடுக்குமாடிகாளாக உருவாக்கி தர வேண்டும்.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.