January 12, 2021
தண்டோரா குழு
2,603 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில் பணிபுரியும் 2,603 நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ராஜாமணி தலைமை தாங்கினார்.மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் அனைவரையும் வரவேற்றார்.இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது :
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில்,ஏழை,எளியோரின் நலன்காக்க ஏராளமான நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 1,674 ஆண் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 762 மதிப்பிலும், 929 பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 77 ஆயிரத்து 261 மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டுகிறது.
இதுதவிர ரூ.8 லட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, வெல்லம் 1 கிலோ, நெய் 100 கிராம், பாசிப்பருப்பு 250 கிராம், முந்திரி 25 கிராம், திராட்சை 25 கிராம், ஏலக்காய் 5 கிராம், மஞ்சள்கொத்து, கரும்பு வழங்கப்படுகிறது. எனவே 2,603 நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.41 லட்சத்து 87 ஆயிரத்து 165 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில், அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கி உள்ளது.கோவை மாவட்டத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. தூய்மை பணியாளர்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் பணியானது சிறப்பான, மகத்தான பணியாகும். கோவை மாநகாட்சியில் சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மதுராந்தகி, பொறியாளர் லட்சுமணன், நகர்நல அலுவலர் டாக்டர் ராஜா, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.