January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவைகளை மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்சியர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் மொத்தம் 29 லட்சத்து 97 ஆயிரத்து 733 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விதமாகவும், நீக்கம், முகவரி மாற்றம் உள்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றன.
இதில் பெயர் சேர்ப்புக்கு மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 858 பேர் விண்ணப்பித்தனர். திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 1 லட்சத்து 70 ஆயிரத்து 419 பேர் விண்ணப்பம் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு விண்ணபித்தவர்களின் உண்மைத் தன்மை குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை பிப்ரவரியில் வழங்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராஜாமணி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேல் முடிந்துள்ளது. தொடர்ந்து சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்த வர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டை வரும் பிப்ரவரியில் வழங்கப்படும். மேலும் தேர்தல் வரையிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம். இவர்களுக்கான துணை வாக்காளர் பட்டியல் தேர்தலுக்கு முன் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.