January 11, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான ஹேரன்பாலிடம் 2 நாள் கஷ்டடியில் விசாரிக்க கோவை கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து,ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்கள் நடந்து வந்தன. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தற்போது இந்த பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சில ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க. முன்னாள் நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரேன் பால் ஆகியோரை கடந்த 5-ந் தேதி கைது செய்தனர். 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நந்தினி தேவி 20-ந்தேதி வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான அருளானந்தம் உள்பட 3 பேரையும் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, கோவை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை கோபி சிறையில் இருந்து பாலியல் வழக்கு குற்றவாளி ஹெரான்பாலை மட்டும் சிபிஐ அதிகாரிகள் கோவை மகிளா கோர்ட் அழைத்து வந்து 5 நாள் கஸ்டடியில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி ஹெரன்பாலிடம் இரண்டு நாள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து இவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில், இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.