January 7, 2021
தண்டோரா குழு
அரசு பள்ளி மாணவர்களின் மன வளத்தை அதிகப்படுத்தும் விதமாக அறம் அறக்கட்டளை சார்பில் ஆன்லைன் கல்வித் திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரானா காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆன்லைன் வழியாகவே ஆசிரியர்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மனநிலை சீராக இருப்பதன் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அறம் அறக்கட்டளை மற்றும் எச்.சி.எல் இணைந்து மாணவர்களின் மன வளத்தை அதிகப்படுத்தும் வகையிலான ஆன்லைன் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விழா கோவை ராஜவீதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களின் நலனை எவ்வாறு பேணிக் காப்பது என்ற ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் லதா சுந்தரம்,
மாணவர்களின் நலனே பள்ளியின் நலன் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த புதிய திட்டத்தை துவக்கி உள்ளதாக கூறினார். மேலும் உடல் வலிமையை விட மாணவர்களுக்குத் தேவையான மன வலிமையே தற்போதைய காலகட்டத்தில் அதீத தேவையாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட அவர், பள்ளி மாணவர்களுகான மன வளத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக கோவை மாவட்டத்தில் 27 மாநகராட்சி பள்ளி, 23 அரசு பள்ளி என மொத்தம் 50 பள்ளிகளில் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 56 ஆயிரத்தி 572 மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.