January 6, 2021
தண்டோரா குழு
கோவை விமான நிலையம் அருகே சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இருந்து நீலகிரிக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய சந்திப்பில் இருந்து காளப்பட்டி, குரும்பபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் சந்திப்பில் இருந்து குரும்பபாளையம் வரையில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது 10 மீட்டர் உள்ள சாலை 22 மீட்டராக விரிவாக்கம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்கட்டமாக காளப்பட்டி, எஸ்.எஸ்.குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பொது மக்களிடம், ஆட்சேபணை பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘‘விருப்பம் உள்ளவர்களின் நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும். அவர்களுக்கான இழப்பீடும் விரைந்து வழங்கப்படும்.இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் கோவையில் இருந்து நீலகிரி செல்வதற்கு மாற்று வழிதடமாக அமையும்,’’என்றனர்.