January 6, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திதிமுக மகளிர் அணியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இந்நிலையில்,திமுக மகளிர் அணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோவை நீதிமன்றத்தின் ஒன்றாவது வாயில் முன்பு அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹெரன் பால் ஆகிய மூவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.