January 2, 2021
தண்டோரா குழு
கோவை விழாவின் ஒரு பகுதியாக கொரோனா காலத்தில் முன் களப்பணியாற்றிய இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவையில் ஆண்டு தோறும் நடைபெறும் 13வது கோவை விழா இன்று துவங்கியது. இந்த விழாவை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துவங்கி வைத்தனர்.இந்த விழாவில், கொரோனா காலத்தில் முன் களப்பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதனால், மருத்துவ பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,
“இங்கு தூவப்பட்ட மலர்கள் போல் இந்தாண்டும் மென்மையாக அமைய பிரார்த்திக்கிறேன். கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி 17 இடங்களில் நடைபெறுகிறது. உருமாறிய வைரஸ் தொற்று வந்தாலும் அதனை எதிர்கொள்வோம். உள்ளாட்சித்துறை அமைச்சர் கோவையில் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் வந்து களப் பணியாற்றி உள்ளார் அவருக்கு நன்றி.” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
“சுகாதாரத்துறை அமைச்சர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு கூட இத்தனை வசதிகள் செய்து கொடுத்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் அரசு மருத்துவமனைக்கும் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார்.தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று களப்பணி மேற்கொண்டதன் பிரதிபலனாக இன்று அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. தனது குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே மற்றவர்கள் அச்சப்படும், சூழலில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி அற்புதமானது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதன் திறப்புவிழா உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கும். இந்தியாவிலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் போல் களப்பணி ஆற்றியவர் எந்த அமைச்சரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஓகே சின்னராஜ்,எட்டிமடை சண்முகம், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா, கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.