December 30, 2020
தண்டோரா குழு
மக்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க 186 வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தது என கோவை மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் குப்பைகளை தரம் பிரிக்கும் பழக்கத்தினை பயிற்றுவிக்கும் பணியில் பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பாரதத் திட்ட தூதுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் போடப்படுகின்றன. தூய்மை பாரத தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பொதுமக்களிடம் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பழக்கத்தினை கொண்டு சேர்த்து கோவை மாநகரத்தினை மேலும் தூய்மையான நகரமாக வைத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
தற்போது 186 சிறிய கனரக வாகனங்கள் மக்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே போல் மறுசுழற்சி கழிவுகளை சேகரிக்க 5 வாகனங்கள் வந்துள்ளது. இந்த வாகனங்கள் வீடு வீடாக சென்று தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடும்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தோட்டக்கழிவுகளை, அக்கழிவுகள் உருவாகும் அதே இடத்திலே நுண்ணிய துகள்களாக உருவாக்கி அப்புறப்படுத்த மண்டலத்திற்கு ஒரு துகள்களாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகளில் பச்சை மற்றும் நீல நிற பக்கெட்டுகளும், மறு சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்வாகனங்கள் (Tata ace) சாக்குப்பைகளும் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.