December 30, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை, விதிமுறைகளை மீறும் ஓட்டல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த அதிக வீரியம் கொண்ட கொரோனா பரவி வருகிறது. எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு ஆணைப்படி கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. இதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல சாலைகள், தெருக்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. அரசின் இந்த விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகா அளவிலும் சப்-கலெக்டர் தலைமையில், தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.