December 30, 2020
தண்டோரா குழு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகத்தில் இருந்து நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, வேளாண் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் வேளாண் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண்மை பல்கலைகழகத்தில் 200 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 2014 ம் ஆண்டிற்கு பிறகு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வேளாண் முனைவர் பட்டதாரிகளை பணிக்கு எடுக்காமல், அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களை நிரமிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் 1700 க்கும் மேற்பட்ட வேளாண் முனைவர் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும், பல்கலைகழகம் இம்முடிவை கைவிட்டு வேளாண் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்கலைகழக முதன்மையரிடம் மனு அளித்துள்ள வேளாண் முனைவர் பட்டதாரிகள், தொடர்ந்து பல்கலைகழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.