December 29, 2020
கோவை செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணி விரைவில் துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், கட்டிடங்கள் போன்றவைகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனை அடுத்து செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூரில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. அந்த வீடுகளை பெற்றுக்கொண்ட பலர் ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யாமல் இருந்து வந்தனர்.
இதனையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 98 வீடுகளுக்கு மின் இணைப்பை அன்மையில் துண்டித்தனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘செல்வாம்பதி குளக்கரையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்லவும், வீடுகளை காலி செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை காலி செய்தவுடன் வீடுகளை இடிக்கும் பணிகள் விரைவில் நடைபெறும்’’ என்றார்.