December 28, 2020
தண்டோரா குழு
கோவையில் திமுக நடத்தும் மக்கள் கிராம சபைகளை கோவை மாநகர காவல் துறை தடுப்பது தொடர்ந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தி.முக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
கோவை காந்திபுரம் திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகின்றது. பழைய மார்கெட்டில் பொருட்களை வாங்கி அதற்கு பெயின்ட் அடித்து புதியதை போல பயன்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும் நீதிமன்ற உத்திரவிற்கு மாறாக நீர்நிலைகளின் அளவுகள் குறைக்கபட்டு நீர்நிலைகளின் நடுவே சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது எனவும் இந்த பணிகள் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
பந்தய சாலை பகுதி பசுமை பகுதியாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தீர்மானம் போட்டு இருக்கும் நிலையில் , அங்கு வணிக நிறுவனங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது எனவும்
உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்திரவின் பேரில்
குளக்கரைகளிலும், பந்தய சாலை பகுதிகளிலும் உணவு விடுதிகள் அமைக்கப்படுகின்றது என தெரிவித்த அவர்,1000 கோடி அளவில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெறும் வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்தார்.
தரமற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்டித்தும், ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் வரும் 31ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.அதிமுகவினர் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொங்கல் டோக்கன் வழக்குவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
கோவையில் அம்மா கிளினிக் திறக்கும் போது அதிமுக சார்பில் சாலைகளில் அதிக அளவிலான கட்அவுட் வைத்திருக்கின்றனர் என கூறிய அவர், அந்த கட் அவுட் வைத்த அதிமுகவினர் மீது கோவை மாநகர போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கேள்வி எழுப்பினார். கோவையில் திமுகவினர் நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என முனைப்பில் கோவை மாநகர காவல் துறை செயல்படுகின்றது என குற்றம்சாட்டிய அவர்,மக்கள் கிராம சபைகளை கோவை மாநகர காவல் துறை தொடர்ந்து தடுக்கும என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும்
திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தெரிவித்தார்.