December 24, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாங்கிபாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, தேவனாம்பாளையம், காளியண்னம்பாளையம், கக்கடவு மற்றும் சூலக்கல் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மாவட்டஆட்சியர் ராஜாமணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கோடாங்கிபாளையம் ஊராட்சியில் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகள், செட்டிக்காபாளையம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணிகள், கோதவாடி ஊராட்சியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 3.25 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணிகள், தேவனாம்பாளையம் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தனியார் தோட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மண்வரப்பு அமைக்கப்பட்டு வரும் பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட கலெக்டர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.