December 23, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கயின் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. வங்கிகளின் சேவை இத்துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்டத்தினை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும். வேளாண் தொழில்களுக்கு ரூ.8038.07 கோடி (35 சதவீதம்), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.9982.13 கோடி (43 சதவீதம்), இதர தொழில்களுக்கு ரூ.4945.26 கோடி (22 சதவீதம்) என மொத்த ரூ.22965.47 கோடியில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு வளன் சார் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிகழ் ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி ஆற்றல் 11.72 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற கடன்வசதிகள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.
இவ்வாறு ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ராதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.