December 18, 2020
தண்டோரா குழு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கோவை காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பை பேரணி நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் மாற்று அரசியல் கட்சியினர் இந்த வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதராவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஏர்கலப்பை போராட்டம் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் எதிரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை ஏர் கலப்பைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார்,
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மூன்று சட்டங்களை இயற்றி வரலாற்று பிழையை செய்து விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்து உள்ளது.இந்த சட்டங்களால் விவசாயகளின் உரிமைகள் பறிக்கபட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.இந்த சட்டங்கள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றார்.காங்கிரஸ் கட்சி காலத்தில் பசுமை புரட்சி ஏற்படுத்தி விவசாயிகள் தோழோடு தோல் நின்றதாகவும் ஆனால் தற்போது கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக விவசாயத்தை அடகு வைக்கின்ற செயலை மத்திய அரசு செய்து வருவதை கண்டிப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணவிட்டால் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.