December 15, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதில் மாநகராட்சி மூலம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்படாமல் விடுபட்ட சிங்காநல்லூர்,ஒண்டிப்புதூர், பீளமேடு, வடவள்ளி,வீரகேரளம்,கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதிதாக சாக்கடை குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று அப்பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் நடைபெற்றது. இக்கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
புதிதாக பாதாள சாக்கடை திட்டம் இணைக்கப்படவுள்ள கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் கழிவு நீர் சேகரிக்கப்படும்.அதனை பிரதான கழிவுநீர் நீருந்து நிலையம் மூலமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். பின்னர் அருகிலுள்ள சங்கனூர் பள்ளம் ஓடை வாயிலாக நொய்யல் ஆற்றில் விடப்படும்.
வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளில் பெறப்படும் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு முத்தண்ணன் குள கடைவழி ஓடை வாயிலாக நொய்யல் ஆற்றில் விடப்படும். இதைப்போலவே கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் விடுபட்ட பகுதிகளான கணபதி, கணபதி மாநகர், தண்ணீர் பந்தல், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்விடங்களில் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.