December 14, 2020
தண்டோரா குழு
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பீளமேடு, விலாங்குறிச்சி, காந்திமாநகர், பீளமேடு புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொது இடத்தில் வார சந்தைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.
இதுகுறித்து ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில்,
” திங்கள் முதல் வியாழன் வரை இந்த இடங்களில் வார சந்தைகள் அனுமதியின்றி நடத்தப்படுகிறது. வார சந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் போது அரசு அதிகாரிகள் சுங்கம் வசூல் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். சுமார் ரூ. 25 ஆயிரம் வரை ஒரு சந்தைக்கு சுங்கம் வசூல் செய்ய முடியும். அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வார சந்தைகளை வரைமுறைப்படுத்த வேண்டும்,” என்றார்.