December 8, 2020
தண்டோரா குழு
தனியார் வாகனம் மோதியதில் ஏற்பட்ட மின்கசிவில் சேதமடைந்த பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்ஸ் ஆட்டோவில் பொதுமக்கள் எடுத்து வந்தனர்.
கோவை திருச்சி சாலை சுங்கம் சிந்தாமணி பின்புறம் காமராஜர் நகர் பகுதி உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த பகுதிக்குள் வந்த தனியார் வாகனம் மின்கம்பத்தில் மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தங்களது மின்னனு சாதனங்கள் பழுதடைந்ததாக கூறி கூட்ஸ் ஆட்டோவில் அந்த பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
கடந்த 6ம் தேதி மதியம் சுமார் 1மணியளவில் அமேசான் ஆன்லைன் நிறுவன பொருட்களை விநியோகம் செய்யும் டாடா ஏஸ் வாகனம் (TN45AL6384) நெருக்கமான வீடுகள் உள்ள அப்பகுதிக்குள் வரும்போது டிரான்ஸ்போர்மர் மீது மோதியதில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் 25 வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், மடிக்கணினி, போன்ற 2.5 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பின்வாரிய ஊழியரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும் படியும் கூறியதாக தெரிவித்தனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் அங்கும் தங்களது புகாரை ஏற்க மறுப்பு தெரிவித்ததால் விபத்து ஏற்படுத்திய நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.