December 7, 2020
தண்டோரா குழு
இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் பெரும்பாலான கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள ஒருசில கல்லூரிகளிலும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், பல்கலைகள் அனைத்தும், இன்று முதல் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில் மட்டும், இளநிலை, முதுநிலை என, அனைத்து வகுப்புகளும் இன்று துவங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுநோய் பரவலால், மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கிய பிறகும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கல்லுாரிகள், பல்கலைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, கடந்த 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது.
கோவையை பொருத்தவரை தன்னாட்சி அதிகாரம் பெற்ற பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் இணையவழியில் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான கல்லூரிகள் இன்று திறக்கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ள ஒரு சில கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்திற்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் , வகுப்றையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட இருக்கின்றன. இதனால் முதல் நாளான இன்று வகுப்புகளுக்கு வர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை. சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டும் தனிநபர் இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வகுப்புகளில் பங்கேற்று உள்ளனர்.