December 6, 2020
தண்டோரா குழு
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 – ஐ நடைமுறைப்படுத்து , பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எஸ்.டி.பி.ஐ.சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடித்த டிசம்பர் 6 ம் தேதியான இன்று SDPI கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக , கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.சார்பாக ஆத்துப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் கே.கே.எஸ்.எம் .தெஹ்லான் பாகவி , தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் தோழர் கு .ராமகிருட்டினண், நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மற்றும் கோவை செய்யது ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில்,மத்திய அரசே, நீதித்துறையே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ நடைமுறைப்படுத்து, பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு , குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.கே.எஸ்.எம் . தெஹ்லான் பாகவி பேசுகையில்,
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில், முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதை மறக்காமல் இருக்கவும் வருங்கால தலைமுறைகளுக்கும் பாடர் மசூதியின் வரலாற்றை எடுத்துக்கூறவும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி எழுப்பும் வரை நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தினத்தில் நாடு முழுவதும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருவதாகவும், இழந்ததை மீட்கவும், இருப்பதை காக்கவும் உறுதியுடன் போராடுவோம் என அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் , தொழிற்சங்க நிர்வாகிகள் , வர்த்தக அணி நிர்வாகிகள் , தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் . பெண்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டனர்.