December 5, 2020
தண்டோரா குழு
கோவையில் தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் கழிவுகளை கையாண்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் அருகே அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் அருகிலுள்ள ஆவாரம்பாளையம் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கின் நுழைவாயில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி வந்தது. இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கையால் கழிவுநீரை தூய்மை பணியாளர்கள் கையாண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, புதிய தலைமுறை வீடியோ பதிவு செய்ததுடன், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் கேட்டபோது, வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் அவ்வப்போது கிழிவதால், பணியின் போது அடிக்கடி உபகரணங்களை மாற்றுவது சாத்தியமில்லை என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து இதுபோன்ற கடினமான கழிவுகளை கையாளும் பணியை மேற்கொள்வதில் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் 2019 வரை 174 பேர் கழிவுகளை அகற்றும் பணியில் உயிரிழந்துள்ளனர்.
கோவையில், மட்டும் 19 பேர் உயிரிழந்திக்கிறார்கள். இதைத் தடுக்கும் விதமாக, திருவனந்தபுரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது போலவே, கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு, பாண்டிகூட் 2.0 என்ற நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் கோவை மாநகராட்சிக்கு மேலும் 5 பாண்டிகூட் 2.0 ரோபோக்கள் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ஒதுக்கி வாங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ரோபோக்கள் முறையாக இயங்குவதில்லை என்றும், இதுபோன்ற திட்டத்தை பயனுள்ளதாக முழுமையாக மாற்றினால் மட்டுமே மனிதர்கள் வெறும் கைகளால் கழிவுகளை கையாளுவதை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.