November 26, 2020
தண்டோரா குழு
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் ,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினர்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்தும்,பொதுத்துறை சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்தும், வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்தும் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து அறிவித்தன.தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோவையில் வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு சேவைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
பல்வேறு துறை மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வராத காரணத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே கோவையில் பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. கோவை மாநகரில் சுமார் 30 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை.கோவையில் இருந்து கேரளம் செல்லும் பஸ்கள் மட்டும் ஓடவில்லை. அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
கோவையில் உள்ள பஞ்சாலைகள், என்ஜினியரிங் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை யொட்டி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் தொ.மு.ச பெரியசாமி, ரத்தனவேல், சி.ஐ.டி.யூ பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி துளசி தாஸ், சண்முகம், ஹச்.எம்.எஸ். ராஜாமணி, வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.வங்கிகள், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றதால் அத்துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் வருமான வரித் துறை, தபால், தொலைத் தொடர்பு துறை ஆகிய துறைகளில் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மின்வாரிய ஊழியர்களும் பெரும்பகுதியினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தலைமைத் தந்தி அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அலுவலர்கள் வந்திருந்தனர். பல்வேறு அரசுத் துறைகளிலும் அலுவலர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாநில அரசுத் துறை அலுவலகங்களில் வருவாய்த் துறையினர் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். 20 சதம் பேர் பணிக்கு வரவில்லை.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சில அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்திருந்தனர்.இதனால் கலெக்டர் அலுவலக பணிகள் சற்று பாதித்தது.வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையங்கள், பஸ் டிப்போக்கள், ரயில் நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.