November 24, 2020
தண்டோரா குழு
பொள்ளாச்சி வட்டம் கொண்டே கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் P. மோகன்ராஜ். தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வரும் இவர் மாணவர்களுக்காக தனி இணையதளம்,யூடியூப் சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளை உருவாக்கி தன்னுடைய கற்பித்தல் பணிகளை புதுமையான தொழில் நுட்பத்தின் மூலம் தினந்தோறும் செய்து வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளான உலக மாணவர்கள் தின விழா மற்றும் குழந்தைகள் தினம் விழா (14-11-2020)இரண்டு ஆகிய விழாக்களையும் ஆன்லைன் மூலம் நடத்தி தமிழகம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வினாடி வினா போட்டிகளையும் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் இணைய வழியில் வழங்கி மாணவர்களைப் பாராட்டியுள்ளார்.
இவரது கல்விச் சேவையைப் பாராட்டிப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இவருக்கு கல்வி ரத்னா விருது,ஆசிரியர் சிற்பி விருது, இந்தியன் உலக சாதனை நிறுவனத்தின் நல்லாசிரியர் விருது அப்துல்கலாம் அவர்களின் கனவு ஆசிரியர் விருது,அறிவு மாமணி விருது அறிவுச்சுடர்காந்தி விருது மற்றும் தேசத்தின் சிற்பி விருது போன்ற விருதுகளை வழங்கி இவரை கௌரவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.