November 22, 2020
தண்டோரா குழு
மருதமலை முருகன் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்கினர்.
கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியினர் வேல் பூஜை அறிவித்தனர்.அதைத்தொடர்ந்து முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண் , பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல் பூஜை செய்தனர். பாஜகவினர் ஏற்பாட்டில் பூர்ண கும்ப மரியாதையை துணை முதலமைச்சர் மற்றும் தமிழக தலைவர் முருகன் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிவானந்த காலனி பகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். பாஜக தலைவர் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் காரை தொடர்ந்து வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வடவள்ளி பகுதி துணை தலைவர் சி ஆர் வேணுகோபால் ,கவுண்டம்பாளையம் மருத்துவ அணி தலைவர் பாலச்சந்திரன் வ்ர்மா, செயலாளர் பூபால், பொருளாளர், பிரதீப், ஜெயபிரகாஷ், வேல்முறுகன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.