November 21, 2020
தண்டோரா குழு
கோவையில் இருவேறு அரசு பள்ளிகளில் பயின்று தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள இரண்டு மாணவர்களுக்கான முழு கல்வி செலவையும் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி வழங்கினார்.
முன்னதாக இரு மாணவர்களுக்கும் அசோகபுரம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய ஆறுகுட்டி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் எந்தவிதமான உதவி தேவைபட்டாலும் தன்னை அணுகலாம் எனவும் உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தனது தொகுதிக்குட்பட்ட அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும், சர்க்கார் சாமக்குளம் அரசு பள்ளி மாணவி தீபிகா திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.அவ்விருவரின் படிப்பு செலவுக்காக ஒருவருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் நான்கு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக முதல்வரின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேபோல் ஏழை மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு கனவை நிறைவேற்றிய முதல்வருக்கும் கல்வி செலவுக்கான நிதி உதவி செய்த சட்டமன்ற உறுப்பினருக்கும் தாங்கள் எப்பொழுதும் நன்றியாக இருப்போம் என மாணவர்கள் தெரிவித்தனர்.