November 20, 2020
தண்டோரா குழு
வேல் யாத்திரை என்ற பெயரில் மத யாத்திரை நடத்துவதை தடுக்கத்தவறிய தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக முற்போக்கு இயக்கங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வேல் யாத்திரைக்கு எதிராக கோவையில் 22 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு இயக்கங்கள் அறிவித்திருந்தன. இதனையடுத்து முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகளுடன், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் போராட்டத்தை வாபஸ் பெறக்கோரினார். இதனை மறுத்த முற்போக்கு இயக்கத்தினர், வேல் யாத்திரை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தை வருகின்ற 22 ஆம் தேதி முற்றுகையிடப்போவதாக முற்போக்கு இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளையும், வேலையில்லா திண்டாட்டம், புதிய கல்விக்கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்புகளால் மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதை மறைக்கவே வேல் யாத்திரை என்ற பெயரில் மத யாத்திரை கலவர யாத்திரையாக நடத்தப்பட்டு வருகிறது. பாஜக யாத்திரை என்ற பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா காலத்தில் ஒன்று கூடி கொரொனாவை பரப்பும் விதமாக செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது . இரண்டு வழக்குகள் ஒருவர் மீது போடப்பட்டாலே குண்டர் சட்டம் போடும் சூழலில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட போதும் தமிழக அரசும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.என்றார்
விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தொண்டர்கள் முற்றுகையிட இருக்கின்றனர்.