November 18, 2020
தண்டோரா குழு
கோவையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கோவையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் சராசரி அளவுக்கு அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்தது.
இந்த நிலையில் தற்போது கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை வெயில் அடிப்பதும் மழை பெய்வதுமாக இருந்தது.நகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அவினாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீர் நிரம்பியதால் சிறிதுநேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.
நேற்று மாலை முதல் இரவு வரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்பட்டனர். ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள கிக்கானி பாலத்திற்கு கீழே உள்ள சாலையிலும் மழைநீர் தேங்கியது. பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தேவாங்கர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியதால் சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.