November 17, 2020
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சிவகங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் பெண்வீட்டார் சம்மதிக்க மறுத்துள்ளனர். பெண் வீட்டில் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில் பின் அங்கிருந்து தப்பித்து கோவையை சேர்ந்த கார்த்திகை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்பொழுது இரண்டு வீட்டாருக்கும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரின் செயல்பாடுகள் சற்றே வித்தியாசமாக மாறி இருக்கின்றன. குறிப்பாக பெண் வீட்டார் தரப்பில் காவல் துறையில் பணியாற்றும் சிலர் இருப்பதன் காரணமாக போலீசார் பெண் வீட்டாருக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு தராத நிலையில் துடியலூர் காவல் நிலையத்துக்கு மாற்றி இருக்கின்றனர் அங்கும் போலீசார் உரிய வகையில் பதில் அளிக்காததால் இளம் காதல் ஜோடிகள் தற்போது பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் பெண் காணாமல் போனதாக சிவகாசியில் பெற்றோர் தரப்பில் புகார் ஒன்று கொடுத்துள்ளனர். அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட பெண் வீட்டார் வந்திருப்பதாகவும் அவர்கள் பெண்ணை அழைத்து செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் பெண் தகவல் தெரிவிக்கின்றார். மதம் மாறி திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் போலீசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதம் மாறி திருமணம் செய்த இளம் காதல் ஜோடிகளை பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணமக்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.