November 16, 2020
தண்டோரா குழு
நமது அம்மா நாளிதழில் வெளியான வேல் யாத்திரை தொடர்பான தலையங்கத்தை பணிச்சுமை காரணமாக பார்க்கவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை பீளமேடு அருகே அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பல்வேறு தொழில் துறையினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணை தலைவர்கள் அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்,
பா.ஜ.கவில் தொழில்முனைவோர் இளைஞர்கள்,கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து வருவதாகவும் தெரிவித்த அவர் இதற்கு பிரதமர் மோடியின் ஊழற்ற ஆட்சியால் தினமும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர் என தெரிவித்தார். தொழில்துறையை சார்ந்த 120 பேர் இன்று கோவையில் பா.ஜ.கவில் இணைகின்றனர்.
பா.ஜ.கவின் மிகப்பெரிய வளர்ச்சியை இது காட்டுகின்றது.ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை போல பா.ஜ.கவில் பல அதிகாரிகள் இணைய தயாராக இருக்கின்றனர். வேல்யாத்திரை நாளை திட்டமிட்டபடி தரும்புரியில் துவங்குகின்றது. தமிழகத்திற்கு 21ம் தேதி அமித்ஷா வருகையின் போது பெரிய அளவிலான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தவர். அமித்ஷா வருகையின் போது யாரையெல்லாம் சந்திக்கின்றார் என்ற தகவல் தற்போது இல்லை என கூறிய அவர் அரசு மற்றும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்கின்றார் என தெரிவித்தார்.
பணிச்சுமை காரணமாக நமது அம்மா நாளிதழில் வேல்யாத்திரை குறித்து என்ன வந்தது என முழுமையாக தனது கவனத்திற்கு வரவில்லை என தெரிவித்த அவர் நாளிதழில் என்ன வந்தது என்பது குறித்தும் எங்கள் கட்சி நிர்வாகி என்ன சொன்னார் என்பது குறித்தும் பார்த்த பின்னரே இது குறித்து கருத்து சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து கட்சி தலைமை, பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என தெரிவித்தவர் கந்தசஷ்டி கவசம்,முருகன் பெருமானை இழிவுபடுத்தியதை யாருமே விரும்பவில்லை எனவும் மனம்புண்பட்ட பக்தர்களை ஆறுதல் படுத்தவும்,மத்திய அரசின் திட்டங்களைகொண்டு செல்லவும், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கவும் வேல்யாத்திரை நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். வேல்யாத்திரை குறித்த வழக்கில் நீதிமன்றம் சொல்வது குறித்து இங்கு பேசுவது சரியானது கிடையாது என தெரிவித்த அவர் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கின்றது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது தீவிரவாதிகள் கையாள்வதில் சில வழக்குகளில் தமிழகரசு சிறப்பாக இல்லை என பா.ஜ.க மூத்த தலைவர்கள் சொல்லி இருப்பார்கள்.துணைவேந்தர் அதிகாரத்தில் தலையிட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்., அவர் மீது எந்த குற்றசாட்டும் இல்லாத நேரத்தில் அவர் மீது விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. துணைவேந்தரை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். துணைவேந்தர் சூரப்பா அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு பணிகளை செய்தார் சூரப்பா மீதான குற்றசாட்டுகளை அவர் சந்திப்பார். அவர் மீதான குற்றசாட்டுகளை அவர் எதிர்கொள்வார் எனவும் இதில் பா.ஜ.க கருத்து சொல்ல ஓன்றுமில்லை என்றார்.
இப்போதைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க இருக்கின்றது எனவும் அமித்ஷா வரும் போது பா.ஜ.க தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் எனவும் அமித்ஷா தேர்தலின் போது சென்ற இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று இருப்பதால் அது எதிர்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.