November 10, 2020
தண்டோரா குழு
கோவையில் திரையரங்குகள் திறப்பு – சினிமா பிரியர்கள் மகிழ்ச்சி !
கோவையில் தமிழக அரசின் நோய் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட்டன.
தமிழக அரசின் நோய் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் செயல்பட துவங்கியுள்ளது.திரையரங்கு செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
எட்டு மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கில் புது படங்கள் வெளியாகாத நிலையில் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் வெளியாகின்றன.
கோவையில் covid-19 நோய் பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், போன்றோரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டினால் கோவையில் நோய்த்தொற்றுகள் குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள். அவர்களை பெருமை படுத்தும் விதமாக இன்று ஒரு நாள் முதல் காட்சி அவர்களுக்காக திரையிடப்படுகிறது.
திரையரங்கிற்கு வந்த முன்கள பணியாளர்களை திரையரங்கு ஊழியர்கள் கைகளை தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர் மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சினிமா பாடல்களுக்கு நடனமாடி வரவேற்று திரையரங்கினுள் அழைத்துச் சென்று அமர வைத்தார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திரையரங்கு மேலாளர் ஸ்ரீநாத்,
நோய் பரவல் காலத்தில் மன உளைச்சலுடன் நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு தமிழக அரசின் நடவடிக்கைகளால் நோய்தொற்று குறைந்துள்ள இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்ததற்கு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் அதுமட்டுமல்லாமல் நோய்த் தொற்று பரவும் காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பாடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்கள் காவல்துறையினர் மற்றும் நோய்த்தொற்று குறைபாடுகளுக்காக அவர்களை பெருமை சேர்க்கும் விதமாக இன்று எங்கள் திரையரங்குகளில் முதல் காட்சியானது இலவசமாக திரையிடப்படுவதற்கு தெரிவித்தார். மேலும் திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு அரசின் நோய்த்தடுப்பு வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்படுத்துவதாக தெரிவித்தார்.
திரையரங்கிற்கு வந்த தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள் செவிலியர்கள் எட்டு மாதத்திற்குப் பிறகு திரையரங்கில் இன்று திரைப்படம் பார்ப்பது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்கள் மேலும் நோய் பரவல் காலங்களில் களத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.