November 7, 2020
தண்டோரா குழு
பண்டிகை கால நேரங்களில் இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்வோர் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக தற்போது வீடுகளில் வைத்து உணவு தயாரித்து விற்பனை செய்வோர் அதற்கான தகுந்த உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அனைவரும் இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி பரிசளிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் இனிப்பு கடைகளில் புதிய வகை இனிப்புக்களை பொதுமக்கள் அதிகம் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் இனிப்புக்கள் தயாரிக்கும் போது தரமான மூலப்பொருட்களை பயன் ன்படுத்த வேண்டும் எனவும் இராசயன கலர்களை பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உட்பட அனைத்து விவரங்களும் உள்ள அடைக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகளைத்தான் வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவை மீறி செயற்கை நிறமிகளை பயன்படுத்தக் கூடாது
இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இனிப்பு வகைகள் தயாரிப்பதற்கு தூய்மையான குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.
பால் வகை இனிப்பு பொருட்களை மற்ற பொருட்களுடன் கலந்து கொடுக்கக்கூடாது. அதை தனியாகவே பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும். உணவு பொருட்களை பேக்கிங் செய்பவர்கள், தலையுறை, கையுறை, மேலுறை அணிதல் அவசியம். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தற்போது நகரங்களில் வீடுகளில் தயாரித்து உணவு விற்பனை செய்வோர் அதிகரித்து வருவதாகவும்,இவ்வாறு வீடுகளில் உணவு விற்பவர்கள் அரசின் விதிமுறைப்படி உரிமம் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.