November 7, 2020
தண்டோரா குழு
கோவை ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நிறுவனத்தின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (48). இவரது மனைவி உமா அதே பகுதியில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மகன் ஒருவர் உள்ளார். தனபாலுக்கு ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள பார்ச்சூன் என்ற ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்து வந்துள்ளார். ஆனால் அதில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் மன உளைச்சலடைந்த தனபால் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பார்ச்சூன் நிறுவனத்திற்கு சென்றார்.
மேலும் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தனது வாகனத்தின் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் தீ தனபாலன் உடல் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. வலியால் அலறித் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் அவர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தனபாலின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து, தனபால் எவ்வளவு பணத்தை முதலீடு செய்தார்? தனபாலன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனபால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சில தினசரி நாளிதழ்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.