October 23, 2020
தண்டோரா குழு
கோவை போத்தனூரை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமியும், புளியகுளம் அடுத்த அம்மன் குளத்தைச் சேர்ந்த சண்முகம் (21), என்பவரும், காதலித்ததாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில் அதிக நேரம் செல்போனில்,பேசிக்கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி சிறுமி தனது காதலனான சண்முகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து சண்முகம் தனது நண்பர்களான கணபதியைச் சேர்ந்த அமர்நாத் (21) சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வல்லரசு (20) ஆகியோருடன் ஆலோசனை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு 15 வயதே ஆவதால் 18 வயது வரை, சுமார் மூன்று ஆண்டுகாலம் ஏதாவது ஒரு இடத்தில் தங்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாயமான சிறுமி அம்மன் குளத்தில் உள்ள சண்முகத்தின் தோழியின் வீட்டில் அடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தியதாக சண்முகம், அமர்நாத், வல்லரசு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து போலீசார் சிறுமிக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் போத்தனூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் சிறுமியை சேர்த்தனர்.